முதல் 12 வாரங்களில் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன: சத்திர சிகிச்சை முறை மற்றும் மருந்து மூலமான கருக்கலைப்பு.

90% க்கும் அதிகமானவை இப்போது மருந்து மூலம் செய்யப்படுகின்றன.

கர்ப்பத்தின் 12 வது வாரத்தின் இறுதி வரை கருக்கலைப்பு முறையை நீங்கள் தீர்மானிக்கலாம், ஆனால் அதன் பிறகு, கருக்கலைப்புகள் மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.

கரு எண்ணிக்கையைக் குறைத்தல் (கரு குறைப்பு) என்பது, அது ஏன் செய்யப்பட முடியாது என்பதற்கான மருத்துவ காரணங்கள் இருந்தாலே ஒழிய, கர்ப்பத்தின் 18 வது வாரம் வரை சுயமாக தீர்மானிக்கப்படுகிறது. கரு குறைப்பு என்பது ஒரு தனியான முறையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.

மருந்து மூலமான கருக்கலைப்பு

மருந்து மூலமான கருக்கலைப்புக்கு, நீங்கள் இரண்டு வகையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வீர்கள். நீங்கள் முதல் மாத்திரையை (மைஃபெப்ரிஸ்டோன்) மருத்துவமனையில் பெறுவீர்கள். இது கருப்பையைப் பாதிக்கும், இதனால் கர்ப்பம் தரித்தல் நின்றுவிடும். நீங்கள் மாத்திரையை எடுத்துக் கொண்டவுடன், கருக்கலைப்பு செயல்முறை தொடங்குகிறது.

மாத்திரையை எடுத்துக் கொண்ட பிறகு, நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். அடுத்த சில நாட்களில் உங்களுக்குக் குமட்டல், சிறிது இரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம், ஆனால் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் ஏற்படாது. சில பெண்கள் முதல் மாத்திரையை எடுத்துக் கொண்ட பிறகு கருக்கலைப்பை அனுபவிக்கலாம். இவ்வாறு நிகழ்ந்தால், நீங்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, கருக்கலைப்பை முடிக்க நீங்கள் இரண்டாவது மருந்தை (மிசோப்ரோஸ்டால்) எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் யோனிக்குள் செருகப்படுகின்றன அல்லது நாக்கின் கீழ் வைக்கப்படுகின்றன.

மாத்திரைகளில் உள்ள செயலில் உள்ள சேர்மானங்கள் கருப்பையைச் சுருங்கச் செய்கின்றன. குறிப்பாக கருப்பையின் உள்ளே உள்ளவைகள் வெளியேற்றப்படும் போது உங்களுக்குக் கடுமையான வலி ஏற்படலாம். உங்களுக்கு வலி நிவாரணிகள் வழங்கப்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை விட அதிக இரத்தப்போக்குக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இரத்தக் கட்டிகளுடன் (திரள்) இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது.

மாத்திரைகளை எடுத்துக் கொண்ட 4-6 மணித்தியாலங்களுக்குப் பிறகும் உங்களுக்குக் கருக்கலைப்பு நடைபெறவில்லை என்றால், கருக்கலைப்பு நடைபெறும் வரை ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்படும். நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிடலாம், குடிக்கலாம். சுறுசுறுப்பாக இருப்பது நன்மை பயக்கும், ஏனெனில் இது செயல்முறையை விரைவுபடுத்தி வலியைக் குறைக்க உதவும்.

கருக்கலைப்பை வீட்டிலா அல்லது மருத்துவமனையிலா நிறைவேற்ற வேண்டும்?

கர்ப்பம் 10 வாரங்களுக்குக் குறைவாக இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருந்தால், வீட்டிலேயே கருக்கலைப்பை நிறைவேற்றிக்கொள்ள நீங்கள் தெரிவு செய்யலாம். கருக்கலைப்பு செய்யும் நாளில் உங்களுடன் ஒரு வயது வந்தவர் இருக்க வேண்டும்.

ஆரம்பகால கருக்கலைப்புகளில், பொதுவாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதிலிருந்து கருக்கலைப்பு செய்வதற்கு இடைப்பட்ட நேரம் 4-6 மணித்தியாலங்கள் ஆகும்.

வீட்டில் முடிக்கப்பட்ட கருக்கலைப்புகள் மருத்துவமனையில் செய்யப்படும் அதே முறையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவமனையை எவ்வாறு தொடர்பு கொள்வது, எப்போது கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தவர்களில் பெரும்பாலானோர், அதே நாளில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், மறுநாள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும்.

சத்திரசிகிச்சை மூலமான கருக்கலைப்பு

சத்திரசிகிச்சை மூலமான கருக்கலைப்பு செய்யப்பட வேண்டுமானால், மருந்து மூலமான கருக்கலைப்பு செய்யப்படுவது போலவே, மருத்துவமனையில் ஒரு ஆரம்ப பரிசோதனைக்குப் பிறகு, செயல்முறையின் திகதி மற்றும் நேரம் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும். கருப்பை வாயை மென்மையாக்குவதற்காக செயல்முறைக்கு முந்தைய நாள் காலையில் உங்கள் யோனிக்குள் செருக 3 மாத்திரைகள் (மிசோப்ரோஸ்டால்) உங்களுக்கு வழங்கப்படும். இவை சிறிது இரத்தப்போக்கையும் இலேசான வலியையும் ஏற்படுத்தக்கூடும்.

சத்திரசிகிச்சை செய்யப்படும் நாளில் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். உண்ணாவிரதம் என்பது கடந்த 6 மணித்தியாலங்களுக்கு நீங்கள் சாப்பிடவோ, குடித்திருக்கவோ அல்லது புகைபிடிக்கவோ கூடாது என்பதாகும்.

இது ஒரு சத்திரசிகிச்சை முறையாகும், இதில் உங்களுக்கு வழக்கமாக ஒரு பொதுவான மயக்க மருந்து வழங்கப்படும். மருத்துவர் யோனி வழியாக கருப்பை குழியை கீறுவார்.

செயல்முறைக்கு சுமார் 10 நிமிடங்கள் வரை எடுக்கும். பின்னர், நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு 1-2 மணித்தியாலங்கள் வரை மருத்துவமனையில் இருப்பது பொதுவானது. செயல்முறைக்குப் பிறகு உங்களுக்கு வலி ஏற்பட்டால், உங்களுக்கு வலி நிவாரணிகள் வழங்கப்படும்.

மருத்துவ காரணங்களுக்காகவும், சத்திரசிகிச்சை முறைகளுடன் தொடர்புடைய ஆபத்துகள் காரணமாகவும், கர்ப்பத்தின் 12 வது வாரத்திற்குப் பிறகு தான் மருந்து மூலமான கருக்கலைப்பு வழங்கப்படுகிறது.

கருக்களின் எண்ணிக்கையில் குறைப்பு

கரு குறைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் உள்ள ஒரு கர்ப்பத்தில் செய்யப்படும் ஒரு செயல்முறையாகும், இந்த முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்களின் வளர்ச்சி நிறுத்தப்படும் அதே வேளை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன. கருவின் இதயத்தில் பொட்டாசியம் குளோரைடை செலுத்துவதன் மூலம் இந்த செயல்முறை செய்யப்படுகிறது, இதனால் அந்தக் கரு துடிப்பதை நிறுத்துகிறது.

கரு குறைப்பின் நோக்கம், மீதமுள்ள கரு/கருக்களுடன் கர்ப்பம் தொடர அனுமதிப்பதும், அவை முடிந்தவரை பிரசவ திகதிக்கு அருகில் பிறக்கச் செய்வதும் ஆகும்.

கரு குறைப்பு என்பது, அதைச் செய்ய முடியாததற்கு மருத்துவ காரணங்கள் இருந்தால் ஒழிய கர்ப்பத்தின் 18 வது வாரம் வரை சுயமாக தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, கருக்கள் தொப்புள் கொடியைப் பகிர்ந்து கொண்டால் கரு குறைப்பைச் செய்ய முடியாது.

18 வது வாரத்திற்குப் பிறகு கருக்கலைப்பு

கர்ப்பத்தின் 18 வது வாரம் முடிந்த பிறகு (17 வாரங்கள் மற்றும் 6 நாட்கள்) கருக்கலைப்பு செய்ய விரும்பினால், கருக்கலைப்புக்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில காரணங்களின் (நிபந்தனைகள்) அடிப்படையில், உங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, கருக்கலைப்பு செய்யலாமா வேண்டாமா என்பதை குழு முடிவு செய்யும். கருக்கலைப்புக்கான நிபந்தனைகள் கருக்கலைப்புச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் 18 வது வாரத்திற்குப் பிறகு கருக்கலைப்பு பற்றி இங்கே மேலும் வாசிக்கலாம்.

கருக்கலைப்புக்குப் பிறகு

கருக்கலைப்புக்குப் பிறகு சிலருக்கு அதிக இரத்தப்போக்கும் வயிற்று வலியும் ஏற்படலாம். பெரும்பாலானோருக்கு 2-3 வாரங்களுக்குள் இரத்தப்போக்கு குறைவாகவே இருக்கும்.

சத்திரசிகிச்சை மூலமான கருக்கலைப்பு மூலம் பொதுவாக சில பக்க விளைவுகள் மட்டுமே இருக்கும், மேலும் பெரும்பாலான செயல்முறைகள் சிக்கலற்றவை. மிகவும் பொதுவான முறைப்பாடுகள் குமட்டல் மற்றும் வாந்தி போன்று, மயக்க மருந்துடன் தொடர்பானவை. அரிதான சந்தர்ப்பங்களில், கருப்பை, சிறுநீர்ப்பை அல்லது குடலுக்கு சேதம் ஏற்படலாம்.

சத்திரசிகிச்சை மற்றும் மருந்து மூலமான கருக்கலைப்புகளுக்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களுக்கு அல்லது இரத்தப்போக்கு இருக்கும் வரை நீங்கள் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இரத்தப்போக்கு இருக்கும் போது, தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், நீங்கள் சானிட்டரி டவல்களைப் பயன்படுத்த வேண்டும், டம்பான்களை அல்ல.

கருக்கலைப்புக்குப் பிறகு வித்தியாசமான மற்றும் எதிர்பாராத உணர்ச்சிகளை அனுபவிப்பது இயல்பானது. இது உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஓரளவு ஏற்படுகிறது.

நீங்கள் விரும்பினால் கருக்கலைப்புக்குப் பிறகு மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

கருக்கலைப்புக்குப் பிறகு பின்தொடர்தல்

கருக்கலைப்புக்குப் பிறகு பொதுவாக மருத்துவப் பரிசோதனை இருக்காது. எந்தவொரு பரிசோதனையையும் உங்கள் மருத்துவர் (GP) அல்லது மகப்பேற்று மருத்துவ நிபுணர் செய்யலாம். நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள விரும்பினால், நீங்களாகவே ஒரு சந்திப்பை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கருக்கலைப்பு செய்த அனைவருக்கும் பின்தொடர்தல் ஆலோசனைகளுக்கு உரிமை உண்டு. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து இதை யார் வழங்குகிறார்கள் என்பது வேறுபடலாம். இது மருத்துவமனை, உங்கள் மருத்துவர்(GP) அல்லது சுகாதார மையத்தால் வழங்கப்படலாம். கருக்கலைப்புக்கு முந்தைய பரிசோதனைக்கு நீங்கள் செல்லும்போது இதைப் பற்றிக் கேட்பது நல்லது. அனைவருக்கும் கருக்கலைப்புக்குப் பின்னர் பின்தொடர்தல் தேவையில்லை, எனவே இது ஒரு தன்னார்வ சேவையாகும்.

காய்ச்சல், அதிகரிக்கும் வலி அல்லது அதிக இரத்தப்போக்கு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால், நீங்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

நான்கு வாரங்களுக்குப் பிறகு, கர்ப்பம் முடிந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த நீங்கள் ஒரு கர்ப்பப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 6 வாரங்களுக்குப் பிறகும் உங்கள் மாதவிடாய் ஆரம்பிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கருக்கலைப்புக்கான சிகிச்சை தோல்வியடைவது அரிது.

உங்களுக்கு யாருடனாவது கதைக்கத் தேவையா?

கர்ப்பத்தைத் தொடரலாமா அல்லது கலைக்கலாமா என்பதை முடிவு செய்வது கடினமான முடிவாக இருக்கலாம். பேசுவதற்கு நல்லவர்கள் என்பவர்கள் நீங்கள் நம்பும் நபர்களாக இருக்கலாம். வேறு யாரிடமாவது பேச வேண்டும் என்றால், நீங்கள் Amathea (அமேதியா) ஐத் தொடர்பு கொள்ளலாம், இது மாநில நிதியுதவியுடன் கூடிய இலவச உளவளத்துணை ஆலோசனை சேவையாகும்.

உங்கள் குடும்ப மருத்துவர், சுகாதார மையம்(GP), மருத்துவமனை, குடும்ப ஆலோசனை அலுவலகம் அல்லது சமூக சேவைகள் அலுவலகத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். கருக்கலைப்புக்கு முன்னும் பின்னும் உங்களுக்கு தகவல் வழங்கக் கூடிய ஒருவரை இங்கே நீங்கள் கண்டறியலாம்.

கருக்கலைப்பு பற்றி நீங்கள் யாரிடம் பேசலாம் என்பது பற்றிய தகவலை 23 32 70 00 என்ற எண்ணில் உள்ள Helsenorge உதவி எண் உங்களுக்கு வழங்க முடியும்.

அனைவரும் இரகசியத்தன்மைக்குக் கட்டுப்பட்டவர்கள்.

உள்ளடக்கத்தை வழங்கியோர் Helsedirektoratet

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது 30. மே 2025

Fant du det du lette etter?